உதயா
குடிநீருக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் கொடூரம் காஸாவில் மட்டுமே நடந்து வருவது வேதனைக்குரிய உண்மை. இந்த அவல நிலை எப்போதுதான் முடிவுக்கு வரும்?
இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காஸா மக்கள் முன் எப்போதும் இல்லாத துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். எந்தவொரு நெருக்கடியிலும் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்களை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வலியுறுத்தினாலும், காஸா மக்கள் இடைவிடாத குண்டுவீச்சுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தாலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான ஆழமான பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகவே இருந்து வருகின்றன. நிலம் மற்றும் அடையாளத்திற்கான போராட்டம் தான் இந்த பிரச்சினையின் மையப்புள்ளி.
முதலாம் உலகப் போருக்குப் பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் இருந்த ஓட்டோமான் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்ததும், பலஸ்தீனப் பகுதி பிரிட்டன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அப்போது, அங்கே யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் வாழ்ந்தனர். ஐரோப்பாவில் நடந்த துன்புறுத்தல்கள், குறிப்பாக ஹோலோகாஸ்ட் காரணமாக, பல யூதர்கள் பலஸ்தீனத்தில் தஞ்சம் புகுந்தனர். இதனால் யூதர்களின் மக்கள் தொகை அதிகரித்ததுடன், இரு குழுக்களுக்கும் இடையே வன்முறையும் வெடித்தது. 1947 இல், ஐ.நா. பலஸ்தீனத்தை தனித்தனி யூத மற்றும் அரபு நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது. இதன் விளைவாக, இஸ்ரேல் என்ற நாடு உருவானது. இதனை பலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ளாததால், பல தசாப்தங்களாக நடந்து வந்த மோதல் இப்போது முழுமையான நெருக்கடியாக மாறியுள்ளது.
இன்று, 365 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ள ஒரு சிறிய நிலப்பகுதியான காஸா, இந்த வன்முறையின் மையமாக இருந்து வருகிறது. இஸ்ரேலின் விரிவாக்கம் மற்றும் , மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் மேற்குக் கரையில் குடியேற்றங்களை அமைத்தமை என்பன படிப்படியாக மோதலைத் தீவிரப்படுத்தியது. காஸாவை தன்னுடன் இணைத்துக்கொள்வது இஸ்ரேலின் நீண்டகால இலக்காக உள்ளது. வலுவான சர்வதேச ஆதரவு இருப்பதால், இஸ்ரேலின் இந்த ஆசையும் இன்றுவரை வலுவாகவே உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொடூரப் போர், ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் தூண்டப்பட்டது. 2023 ஒக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஒரு திடீர் தாக்குதலை நடத்தியது. ஜெரூசலமில் நடந்த ஒரு இசை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் ஹமாஸ் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் ஆரம்பித்த தாக்குதல் இன்றுவரை தொடர்கிறது. 2023 ஒக்டோபர் முதல், 2025 செப்டம்பர் வரை காஸாவில் 65,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 1,51,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் ஹமாஸை மட்டும் குறிவைக்காமல், காஸா மக்களையும் அதிக அளவில் குறிவைக்கின்றமையே மனிதாபிமான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. நிவாரண முகாம்களில் உணவு மற்றும் உதவி தேடும் மக்கள் தாக்கப்படுகின்றனர். இது பொதுமக்கள், மருத்துவ ஊழியர்கள், மற்றும் மத குருமார்களைப் பாதுகாக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். ஐ.நா. விதிகளின்படி, போரில் மருத்துவமனைகள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது. இருப்பினும், இஸ்ரேல் காஸாவின் முக்கிய மருத்துவமனைகளைத் தாக்கியுள்ளது. இது ஒரு முக்கிய போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. காஸாவில் போர் நெறிமுறைகள், சர்வதேச மனிதாபிமான சட்டம், மற்றும் போரின் விதிகள் ஆகியவை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையே இது காண்பிக்கிறது.
உதவிப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் குறிவைக்கப்படுகின்றனர். கடந்த 21 மாத மோதலில் 270 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் நோக்கம், காஸா குறித்த உண்மையை உலகம் அறிந்துகொள்வதைத் தடுப்பதேயாகும்.
மனிதாபிமான நெருக்கடி
குண்டுவீச்சுகளுக்கு அப்பால், இஸ்ரேல் காஸா மக்களை அழிப்பதற்கு ஒரு புதிய உத்தியைப் பயன்படுத்துகிறது. அதுதான் பட்டினி போட்டு அழிப்பது. பல மாதங்களாக, இஸ்ரேல் உதவிப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தியது. இது ஒரு மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் 22 அன்று, காஸா பட்டினி மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.1 மில்லியன் மக்கள் கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். இதில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் முதியவர்கள் அதிகம் அடங்குகின்றனர்.
“சேவ் தி சில்ட்ரன்” என்ற அமைப்பு, கடந்த 23 மாதங்களில் காஸாவில் சுமார் 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் மட்டுமே இறந்துள்ளனர். நிவாரண முகாம்களில் உணவு உதவி தேடிய குழந்தைகளும் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த மனிதாபிமான நெருக்கடி, பிரபலங்களால் உலக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், கேன்ஸ் திரைப்பட விழாவில், காஸாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் அடங்கிய ரீசேர்ட் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். துனிசிய இயக்குநர் மௌனதர் பென் ஹனியா இயக்கிய “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” என்ற ஆவணப்படம், 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் வெளியானது. இத்திரைப்படம், தனது குடும்பத்துடன் தப்பிச் செல்ல முயன்றபோது இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட ஐந்து வயது ஹிந்த் ரஜாபின் கடைசி நிமிடங்களைக் கூறுகிறது. அவளது குடும்பம் கொல்லப்பட்ட பிறகு, அவள் உதவிக்கு அழைத்தபோது, அவளைக் காப்பாற்ற வந்த அம்பியூலன்ஸ் ஊழியர்களும் கொல்லப்பட்டனர். ஹிந்த் ரஜாபும் சுட்டுக் கொல்லப்பட்டாள்.
சர்வதேச சமூகத்தின் பங்கு
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. உலகளாவிய கண்டனங்கள் மற்றும் போராட்டங்கள் இருந்தபோதிலும், அவற்றுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தலைசாய்ப்பதாக இல்லை. அமெரிக்கா போன்ற சில நாடுகள், பலஸ்தீனியர்களுக்கு உதவி கிடைப்பதையும், அரசியல் பங்கேற்பையும் தடுப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. உதாரணமாக, பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதைத் தடுக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை அவரது விசாவை இரத்துச் செய்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராகப் பேசினால், அரசியல் ஆதரவை இழந்து விடுவோம் என்று பல நாடுகள் அஞ்சுகின்றன. எண்ணெய் வளம் கொண்ட பணக்கார மத்திய கிழக்கு நாடுகள் கூட, பட்டினி கிடக்கும் காஸா மக்களுக்கு உதவ முன்வரவில்லை. உதவக்கூடிய அதிகாரம் கொண்ட நாடுகளே மௌனம் காக்கும் போது, அதிகாரமற்ற சாதாரண மக்களின் குரல்கள் ஒருபோதும் எடுபடப் போவதில்லை.
இன்றைய காஸா நிலைமையையும் இலங்கையின் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரையும் இந்த இடத்தில் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தம். இரு நாடுகளிலும் ஏற்பட்ட அழிவும், துன்பங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். போருக்குப் பிறகும், இலங்கையில் பலர் தங்கள் காணாமல் போன உறவினர்களைத் தேடி வருகின்றனர். மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்போது காஸாவிலும் இதுவே நடந்து கொண்டிருக்கிறது.
மனிதாபிமானத்திற்கான கடைசி வாய்ப்பு
காஸாவில் தற்போது நிலைமைகள் மோசமடைந்துள்ளன. உடைந்து நொறுங்கிய கட்டிடங்கள், சிதைந்து போன வைத்தியசாலைகள், மெலிந்த குழந்தைகளின் காட்சிகள் உலகில் வேறு எந்த நாட்டிலும் மீண்டும் நடந்துவிடக் கூடாது. இரத்தக்கறை படிந்த கைகளால் அம்பியூலன்ஸில் ஏற்றப்படும் குழந்தைகளின் காட்சி, எதிர்கால தலைமுறைகளுக்கு மீண்டும் நடக்கக்கூடாது. இந்தத் துன்பங்கள் முடிவுக்கு வர வேண்டும். அதற்கான மனிதாபிமான முயற்சிகள் தொடர வேண்டும்.

