துரைநாயகம் சஞ்சீவன்
“என்ற மகனெனக்குக் கொள்ளி போட்டாத்தான் என் ஆத்மா சாந்தியடையும்.”
தனது 86 வயதில், குரல் தழுதழுக்க இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை சாந்தமணி குணரெட்ணம் அவர்களின் கண்கள் குளமாகிவிடுகின்றன.
1990 ஆம் ஆண்டு தனது 19 வயதில் காணாமல் போன மகன் குணரெட்ணம் சாந்தகுமார் (குமரன்) ஒரு நாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் அந்தத் தாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்க்கையில் இன்னும் வசந்தம் வரவில்லை. குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வலிகள், ஆறாத காயங்களாக அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் மட்டும் 1990ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 1900 பேர் காணாமல் போயுள்ளதாக காணாமல் போனோரின் உரிமைகளுக்காக இயங்கும் அமைப்புகள் கூறுகின்றன.
காணாமல் போனவர்களின் உறவினர்கள், குறிப்பாக தாய்மார், தங்கள் உறவுகளைத் தேடி சர்வதேச மனித உரிமைகள் தினங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களில், சுமார் 355 பேர், தங்கள் பிள்ளைகளைத் தேடி அலைந்தபடியே உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் துயரமான உண்மை.
குமரன் எங்கே?
இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரில் ஒருவர்தான் குமரன். திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான திருமதி சாந்தமணி குணரெட்ணம், தனது 86வது வயதிலும், தனது மகன் குமரனைத் தேடி வருகிறார். கடந்த 35 வருடங்களாக மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் அவரது வாழ்க்கை, போரின் ஆறாத காயங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது.
1990 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி காலை 6 மணிக்கு, பாதுகாப்புப் படையினரின் அறிவிப்புக்கு இணங்க, திருகோணமலையில் உள்ள மக்கேய்சர் விளையாட்டு மைதானத்திற்கு சாந்தமணியும் அவரது குடும்பத்தினரும் சென்றனர். அங்கு நடந்த சோதனையின்போது, சாந்தமணியின் 19 வயது மகன் குமரன் கைது செய்யப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பஸ்ஸில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.
மகன் கைது செய்யப்பட்ட பிறகு, அவனை மீட்க சாந்தமணி பல வழிகளில் முயற்சித்தார். இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு நபரிடம் உதவி கேட்டபோது, அவர் அதற்காக பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லாததால், தனது காதில் அணிந்திருந்த கம்மலைக் கழற்றி, அதை விற்றுப் பணமாக்கிக் கொள்ளுமாறு கொடுத்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்த நபரின் குடும்பத்தினர் கடத்தப்பட்டதால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.
மகனைத் தேடும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவதற்காக, ஆசிரியர் பதவியிலிருந்து 30 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னரே சாந்தமணி ஓய்வு பெற்றார். மகன் காணாமல் போனது முதல் அவருக்கு நிம்மதியான தூக்கமோ, சாப்பாடோ இல்லை.
1993 ஆம் ஆண்டில், கொழும்பிலுள்ள பிரபல நபர் ஒருவர் மூலம் குமரன் மகசின் சிறைச்சாலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. மறுநாள் மகனைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டதால், அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. இதனால், சாந்தமணி மிகுந்த மனவேதனையுடன் கொழும்பிலிருந்து திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடரும் ஏமாற்றங்கள்
மகனைத் தேடும் இந்தப் போராட்டத்தில் தான் எவ்வாறெல்லாம் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டேன் என்பதை சாந்தமணி இப்படிக் கூறுகிறார்:
“2021 ஆம் ஆண்டு உறவினர் ஒருவரின் மூலமாக கஜன் என்ற கிளிநொச்சி நபர் ஒருவருடைய தொடர்பு கிடைத்தது. தான் சிறையில் இருந்து வந்தவர் எனவும் மகனை வெளியில் எடுக்க உதவி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வீட்டுக்கு வந்து மகன் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டு அவருடன் கதைக்க வைப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் சிறைச்சாலையில் இருந்து தயாரத்ன என்ற நபர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு கதைத்தார். மகன் குமரன் சுகவீனமுற்றிருப்பதாகவும் அவருடன் இரண்டு தினங்களில் கதைக்க வைப்பதாகவும் கொச்சைத்தமிழில் கூறினார். சொன்னதைப் போன்று இரு நாட்களில் மகனை என்னுடன் கதைக்க வைத்தனர். நடுங்கிய குரலின் மகன் என்னுடன் கதைத்தான். அது வேறு யாரினது குரலும் இல்லை. அது என்னுடைய மகனின் குரல்தான். பெற்ற தாய்க்கு தெரியாதா மகனுடைய குரலை? ஏன் அம்மா என்னை இவ்வளவு காலமும் பார்க்க வரவில்லை? என்னை வெளியே எடுங்கள் என்று அழுதான். எனது மகன் கிடைத்துவிட்டான் என்ற ஆனந்தத்திலும் இவ்வளவு காலமும் அவனை வெளியே எடுக்க முடியாத பாவியாக இருந்திருக்கிறேனே என்ற குற்ற உணர்விலும் என்னால் அன்று பெரிதாக கதைக்க முடியவில்லை. சில நிமிடங்களில் இணைப்பை துண்டித்தனர். இவ்வாறு கிட்டத்தட்ட நான்கு, ஐந்து தடவை மகனுடன் கதைத்திருக்கிறேன். தொலைபேசி ஒன்றும் சிம் அட்டை ஒன்றும் வாங்கிக் கொடுத்தேன். இடைக்கிடையே மகனுடன் அவர்கள் மூலமாக கதைத்தேன்.
இதன்போது குறித்த நபர்களிடம் மகனை வெளியே எடுத்து தருமாறு மன்றாடினேன். அதற்கவர்கள் மகனை வெளியே எடுக்க நிறைய பேருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார்கள். நானும் அதற்கு சம்மதித்தேன்.
மகனை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டேன். அதற்கு அவரை வெளி இடங்களில் வைத்துக் காட்ட முடியாது. அதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க வேண்டும் எனவும் வீடு ஒன்றை பார்த்துவிட்டு சொல்வதாகவும் கூறினார்கள். சில நாட்களின் பின்னர் வீடு ஒன்று இருக்கிறது எனவும் அதற்கு முற்பணம் மூன்று இலட்சம் ரூபாவும் வாடகை எழுபதாயிரம் ரூபாவும் கொடுக்க வேண்டும் எனக் கூறி என்னிடம் பணம் கேட்டார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன். இருந்தாலும் மகனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் முற்பணம் திரும்பி வரும்தானே என்ற நம்பிக்கையிலும் கடன்வாங்கி கொடுத்தேன். பின்னர் என்னை கொழும்புக்கு வரச் சொன்னார்கள். அங்கே போய் 13 நாட்களுக்கு மேல் தங்கி நின்றேன். இன்று வருவார் நாளை வருவார் என்று சொன்னார்களே தவிர மகனும் வரவில்லை அவர்களும் வரவில்லை. இறுதியில் தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
மீண்டும் சில மாதங்களில் அவர்கள் தொடர்பு கொண்டு மகனை அநுராதபுரத்தில் உள்ள சிங்களவர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்திருப்பதாகவும் இராணுவ முகாம் ஒன்றுக்கு அருகில் வந்து நிற்குமாறும் தெரிவித்தனர். வேன் ஒன்றுடன் நள்ளிரவு வரை காத்திருந்தோம். இந்த நேரத்தில் மகன் என்னுடன் தொலைபேசியில் கதைத்தார். வாகனம் பழுதாகி இருப்பதாகவும் திருத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நள்ளிரவானதால் வீட்டுக்கு திரும்பிவிட்டோம். பின்னர் வவுனியாவுக்கு பணத்துடன் வருமாறு கூறினார்கள். அங்கே அவர்கள் கூறிய இடத்திற்கு பஸ்ஸில் சென்று காத்திருந்தேன். அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.
இவ்வாறு மட்டக்களப்பில் வைத்து ஒரு தரமும் திருகோணமலையில் வைத்து இரண்டு தடவைகளும் வவுனியாவில் வைத்து மூன்றுக்கு மேற்பட்ட தடவைகளும்; கொழும்பில் வைத்து இரு தடவைகளும் அவர்களின் கையில் பணம் கொடுத்திருக்கின்றேன்.
இப்படி கிட்டத்தட்ட 20 இலட்சத்திற்கு மேல் கடன்பட்டு நகைகளை விற்று யாருக்கும் தெரியாமல்; பணம் கொடுத்தேன். அத்தோடு வங்கி கணக்கு ஒன்றிற்கும் இரண்டு இலட்சம் ரூபாய் போட்டேன்.
தயாரத்ன என்பவரே பணம் கேட்டு தொலைபேசியில் பேசுவார். அவர் சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கே கொண்டுபோய் கொடுக்குமாறு கூறுவார். அதனை கஜன் என்ற நபரே வந்து வாங்கிக் கொண்டு போவார்.
இறுதியாக திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்தில் கொண்டு வந்து இறக்குவதாகவும் அங்கு வந்து நிற்குமாறும் கூறினார்கள். காலையில் இருந்து இரவு வரை பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்தேன். அவ்வளவுதான். மகனும் வரவில்லை அவர்களிடமிருந்து இருந்து இன்றுவரை எவ்வித அழைப்புகளும் வரவில்லை.
இவ்வாறு இலட்சக்கணக்கான பணத்தையும் இழந்து இரவு பகல் பாராது மகனுக்காகக் காத்திருக்கிறேன். ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
எனது மகன் எப்படியாவது என்னிடம் வருவான். சாவதற்கு முதல் அவனை நான் பார்ப்பேன். அவர்களிடமிருந்து எதாவது தகவல் வராதா என்று ஒவ்வொரு நாளும் தொலைபேசியை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எண்ட மகன் எனக்கு கொள்ளி போட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும். எனது மகனை பார்க்காமல் எனது ஆத்மா சாந்தியடையாது” என்கிறார் சாந்தமணி.
குமரனைக் கடத்திச் சென்றவர்கள் யார்? உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா? குமரனைக் காண்பிப்பதாகக் கூறி அவரது தாயாரை ஏமாற்றி இலட்சக் கணக்கில் பணம் கறந்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.
35 வருடங்களாக தனது மகனுக்காக காத்திருக்கும் சாந்தமணியின் இறுதி ஆசை நிறைவேறுமா? அல்லது மகனுக்கான ஏக்கத்துடனேயே அந்த 355 தாயார்களையும் போல இவரும் மரணித்துப் போவாரா? காலம்தான் பதில் சொல்லும்.

