மனிதாபிமான நெருக்கடிகளை சமாளிக்க ஒன்றிணைவோம்!

மனித சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முன்னேற்றத்தின் பல படிகளைக் கடந்து வந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் நாம் சாதித்துள்ள உயரங்கள் வியப்புக்குரியது. எனினும், மனித குலம் எதிர்கொள்ளும் மனிதாபிமானப் பிரச்சினைகள் இன்று உலகத்தைச் சிதைக்கும் மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. மனிதனின் அடிப்படை உரிமைகள், மரியாதை, பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவை இன்றும் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை.

மனிதாபிமானம் என்பது மனிதனின் மனிதத் தன்மையை, கருணையை, பரிவை, அடிப்படை வாழ்வுரிமைகளை மதிப்பதை குறிக்கும். ஆனால் இவை மறுக்கப்படும் சூழ்நிலைகளில் மனிதாபிமானப் பிரச்சனைகள் எழுகின்றது. பட்டினி, வறுமை, போர், அகதிகள், பாலின அநீதி, குழந்தை தொழிலாளர் சுரண்டல், கல்வி-மருத்துவம் மறுக்கப்படுதல், இன-மத அடக்குமுறை போன்றவை இதன் கீழ் அடங்குகின்றன.

உலகின் பல பகுதிகளில் இன்றும் மக்கள் உணவின்றி பசியால் துடிக்கின்றனர். ஐ.நா. அறிக்கைகளின்படி, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சத்துக்குறைவால் உயிரிழக்கின்றனர். தொழில்நுட்ப முன்னேற்றம், அதிக உற்பத்தி இருந்தும், உணவு சமமாகப் பகிரப்படாததே இப்பிரச்சனையின் அடிப்படையாகும். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி என்பதை மறுக்க முடியாது.

உலகம் முழுவதும் நடக்கும் ஆயுத மோதல்கள், உள்நாட்டுப் போர்கள், அரசியல் கலகம் ஆகியவை இலட்சக்கணக்கான மக்களை தங்கள் சொந்த நிலத்திலிருந்து அகதிகளாக்கியுள்ளன. சிரியா, பலஸ்தீனம், உக்ரைன் போன்ற நாடுகள் இதற்குச் சாட்சிகள். வீடு, வேலை, குடும்பம் அனைத்தையும் இழந்து முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் சந்திக்கும் நிலை மனதை சிதைக்கும் வலியாகும்.

இன்றும் பல சமூகங்களில் பெண்கள் அடிப்படை கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் பின்தள்ளப்பட்டிருக்கின்றனர். பாலின அடிப்படையிலான வன்முறை, வேலை இடங்களில் சம ஊதியம் மறுக்கப்படுதல், குழந்தை திருமணங்கள் ஆகியவை பெண்களின் மனித உரிமைகளையே மறுக்கும் செயற்பாடுகளாகும்.

குழந்தைகள் கல்வியின்றி தொழிலாளர்களாகச் சுரண்டப்படுவது, அவர்களின் எதிர்காலத்தை பறித்துவிடுகிறது. குழந்தை தொழிலாளர்கள், பாலியல் சுரண்டல், போர் பகுதிகளில் சிறுவர் போராளிகள்  போன்ற பிரச்சினைகள் உலகின் பெரும் கறையாகவே உள்ளது.

இன்றைய உலகில் காலநிலை மாற்றம் ஒரு புவிசார் பிரச்சினை மட்டுமல்ல; அது மனிதாபிமான நெருக்கடியும் ஆகிறது. வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகின்றனர். சுற்றுச்சூழல் அழிவு நேரடியாக ஏழை மக்களையே அதிகமாகப் பாதிக்கிறது.

கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்களும் மனித இனத்தை விட்டு வைக்கவில்லை. உலகையே உலுக்கி விட்டது எனலாம். 

இலங்கையிலும் பல வருடங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பன மனிதாபிமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது. 

மனிதாபிமான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கான ஒரே தீர்வு மனித நேயம் மட்டுமே. மனிதனை மனிதனே காக்க வேண்டும். இத்தனை பேரழிவுகளுக்குப் பிறகும் இன்னும் இந்த உலகம் சுற்றுகிறது என்றால் அது மனிதநேயத்தால் மட்டுமே. மனிதாபிமான பிரச்சினைகளை முற்றாக தடுக்க முடியாவிட்டாலும் தீர்க்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடியும். அதற்காக தனிமனிதர்களினதும் தன்னார்வ அமைப்புகளினதும் பணி பாரியதாகும்.

சுனாமி, கொரோனா, மற்றும் பிற பேரிடர்களில் உடனடி உதவியை செய்தது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம். மற்றும் உண்மைகளை வெளிப்படுத்தல், மனிதாபிமான பிரச்சினைகளை உலகுக்கு தெரியப்படுத்தல் என்பன மூலம் ஊடகவியலாளர்கள் தங்களுடைய பங்களிப்பைச் செய்தனர். அரசும், தன்னார்வ அமைப்புகளும், ஊடகமும் ஒன்றிணைந்தால் மட்டுமே மனிதாபிமான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். 

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் மனிதாபிமான பிரச்சினைகளையும் அது சார்ந்த விடயங்களையும் எதிர்கொண்டவராகவே இருப்பார்கள். நானும் அதில் ஒருவர்; 

என் அப்பா யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அவரின் சிறு வயது முதல் இளமைக் காலம் வரை அவர் அங்கு வசதியாகவும், சந்தோஷமாகவும் குடும்பத்துடன், நண்பர்களுடன், ஊரார்களுடன் வாழ்ந்து வந்தார். அது இனிமையான நாட்களாகவே இருந்தது என அப்பா ஒவ்வொரு முறையும் சொல்லுவார். ஆனால் அந்த இனிமையான நினைவுகளின் மேல் ஒருநாள் திடீரென இருள் சூழ்ந்தது என வேதனைப்படுவார். 

அது, வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலம். “எதிர்பாராத ஒரு நாள் விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் அனைவரும் ஒஸ்மானியா பாடசாலையில் ஒன்று கூட்டப்பட்டனர். “நீங்கள் இங்கு இருக்கக் கூடாது. உடனே வெளியேறுங்கள்.” என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என யோசிக்கக்கூட நேரமில்லை. உடனே வெளியேறியாக வேண்டும்.  

அப்பாவும், அவரது குடும்பத்தினரும், அனைத்து முஸ்லிம்களும் கண்களில் கண்ணீருடன், மனதில் குழப்பத்துடன், தலைமுறைகளாக வாழ்ந்த அந்த மண்ணை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள். முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.

அங்கு வாழ்ந்த நாட்கள் பசியால் வாடியதும், அச்சத்தால் உறைந்ததும் பிறகு வாழ்வாதாரம் தேடி பல ஊர்களுக்குப் புலம்பெயர்ந்தும் அப்படித்தான் என் அப்பா இந்த ஊருக்கு வந்து, அம்மாவை திருமணம் செய்து, எங்களைப் பேணி பாதுகாத்தார். இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், யுத்தம் நிறைவடைந்து சகஜமாக யாழ்ப்பாணத்திற்கு போய் வர முடியுமாக இருந்தாலும் அப்பா எப்போதும் தன் மனதில் அந்த தாயகத்தின் நினைவுகளோடும், இழந்த நாட்களின் வலிகளோடும் வாழ்கிறார். அதனாலேயே “பழைய நாட்கள் போல இல்லை” என சொல்லி அப்பா மன வேதனைப்படுவதுண்டு.    

எனக்கு நினைவிருக்கிறது, இலங்கை முழுவதும் பயம் சூழ்ந்திருந்தது. பஸ்ஸில் போகும்போதும், பாடசாலைக்குப் போகும்போதும், கொண்டாட்டங்களின் போது எப்போது எங்கு குண்டு வெடிக்கும் என்ற பயம். செய்திகள் அனைத்தும் இரத்த வாசனையுடன் வந்தன. மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தார்கள். 

அப்பா சொன்ன கதைகள், கேட்ட செய்திகள் எல்லாமே சிறு வயதில் என் மனதை மிகவும் பாதித்தது. கேட்ட எனக்கே இப்படி இருக்கும் என்றால் அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும், இன்றும் என்னால் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. மனது கனக்கிறது. 

அதே நாட்களில், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பம் குடியேறியது. அந்த வீட்டின் சுவர்கள் கூட துக்கத்தைச் சுவாசித்தது போல எப்போதும் ஒரே அமைதியாகவே இருக்கும். ஆனால் திடீரென ஒரு அலறல் சத்தம் மட்டும் கேட்கும். நான் ஓடிச் சென்று பார்ப்பேன் அப்போது ஒரு இளம் பெண் ஜன்னல் கம்பியில் தொங்கிக்கொண்டு பித்து பிடித்தவள் போல் கத்திக் கொண்டிருப்பார். அவருக்கு பைத்தியம் என்று நினைத்தேன். இல்லை, அம்மா சொல்லித்தான் தெரியும் யுத்தத்தின்போது குண்டுச் சத்தத்திற்கு பயந்துவிட்டாராம். மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாம். இப்போது சிறிய சத்தம் கேட்டாலும் பயந்து கத்துவாராம். உண்மையாகவே என் மனம் மிகவும் வேதனைப்பட்டது அன்றிலிருந்து அவரை பரிதாபமாகவே பார்க்கிறேன்.  சிறிது காலத்தில் அவர்கள் இங்கிருந்து வேறு ஊருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்று விட்டார்கள் ஆனால் இன்னும் எனக்கு அவர்கள் நினைவிலேயே இருக்கிறார்கள். எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள், எத்தனை குடும்பங்கள், எத்தனை பெண்கள், குழந்தைகள் யுத்தத்தின் காரணமாகச் சிதைந்தனர். யுத்தம் ஒருவரை மட்டுமல்ல, தலைமுறைகளின் கனவுகளைச் சிதைக்கும் என்பதை என் சிறுவயதிலேயே உணர்ந்தேன்.

இன்று, நான் ஒரு ஊடகவியலாளர். உலகளவில் நடக்கும் பல மனிதாபிமானமற்ற நிகழ்வுகளை தினமும் செய்திகளாக்குகிறேன். செம்மணி மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு முதல் காஸாவில் அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுவது வரை அது சார்ந்த செய்திகளை எழுதும் போது மனது கனக்கிறது. என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது. 

இனம், மதம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து மனிதமில்லாமல் மனிதன் எங்கு கொல்லப்பட்டாலும் அதன் வலி ஒன்றே. கண்ணீர் ஒன்றே. எதற்காக யுத்தம் நடக்கிறது என்பதல்ல எதற்காக யுத்தம் நடந்தாலும் பாதிக்கப்படுவது இரு தரப்பிலும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே.

ஐ.நா. போன்ற அமைப்புகள் வலுவாகச் செயல்பட்டு, நாடுகள் ஒன்றிணைந்து மனிதாபிமான நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும், எல்லோருக்கும் இலவச, தரமான கல்வி கிடைப்பதே வறுமை, அநீதி ஆகியவற்றை முறியடிக்கும் முதன்மையான ஆயுதம். பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கினால் சமூகத்தின் பாதி வலுவடையும், போர்களுக்குப் பதிலாக உரையாடல் மற்றும் சமரசம் வழியே பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சி தேவை, இயற்கையைப் பேணுவதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு வாழ்விடத்தை உறுதி செய்வதே உண்மையான மனிதாபிமானப் பணியாகும்.