மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்

மனிதாபிமான அறிக்கையிடல் என்பது, ஆயுத மோதல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆகியவற்றின் போது, ஏற்படுகின்ற மனிதாபிமான நெருக்கடிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவுசெய்து, அவற்றை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்வதாகும்.

மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கடுமையான சவால்களைக் கொண்டது. இதனால் அவர்களின் நாளாந்த வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படலாம். வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை விடயங்களான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரத் தேவைகள் போன்றவற்றை பெறுவது கடினமாகவும் அவசரமாகவும் மாறலாம். இதனால் அவர்களின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். உளநல பாதிப்பு, உள அச்சம், உள அழுத்தம் போன்ற உளம் சார்ந்த பிரச்சினைகள் அவர்களை ஆட்கொண்டிருக்கும். மொத்தத்தில், மனிதாபிமான நெருக்கடி, அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்திருக்கும், இந்த நிலையிலேயே மனிதாபிமான அறிக்கையிடலின் அவசியமும் அவசரமும் உணரப்படுகின்றது. 

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஒரு மனிதாபிமான பிரச்சினையாக இன்று உருவடுத்துள்ளது. 

இலங்கையில் 30 வருட கால யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலப் பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுகின்றனர். மூன்று இனத்தைச் சேர்ந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நீடித்த ஆயுத நெருக்கடியின் போது காணாமல் போன குடும்பங்களில் இருந்து தமது உறவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுமாறு சுமார் 35,000 கோரிக்கைகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி) முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் 15000 குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மீதி குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்த தகவல்களுமில்லை. 

இந்த விடயத்தில் ஐ.சி.ஆர்.சி.யின் பங்களிப்பானது முக்கியமானதாகும். 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை முழுவதும் உள்ளடக்கும் வகையில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மதிப்பீடு ஒன்றை ஐ.சி.ஆர்.சி. மேற்கொண்டது. இதன்போது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதில் அந்த குடும்பங்களுக்கு உள்ள உரிமைகளையும், அதற்கான தேவைகளை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற பரிந்துரைகளை செய்தது. சட்டம் மற்றும் தடயவியல் தொழில்நுட்பங்களின் ஊடாக காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்திற்கு தொழில்நுட்ப உதவிகளையும், தரவு முகாமைத்துவம் தொடர்பான ஆலோசனைகளையும் ஐ.சி.ஆர்.சி. வழங்கியிருந்தது.

மேலும், காணாமலாக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆட்களுக்காக இறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக காணாமல் போனமைக்கான சான்றிதழை அறிமுகப்படுத்தவும் அதிகாரிகளுடன் இணைந்து ஐ.சி.ஆர்.சி. செயல்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த நிலையிலே இன்று, செம்மணி புதைகுழியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம், மனிதாபிமான பிரச்சினைகள் விரிவடைந்து, மனிதாபிமான அறிக்கையிடலில், ஊடகவியலாளர்களின் வகிபாகத்தை, மேலும் அவசியப்படுத்துவதாக மாறியுள்ளது. 

அண்மையில் திருகோணமலை – சம்பூரில் உள்ள கடற்கரைப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், மனிதாபிமானப் பிரச்சினைகளின் ஆழத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அகழ்வுப் பணிகளுக்கான செலவின அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த எச்சங்களில் இருந்து தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடை கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்வு, மனிதாபிமான அறிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கவும் உதவுவதை எடுத்துக்காட்டுகிறது. 

விசாரணைக்கு வந்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இந்த மனித எச்சங்களில் இருந்து தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற விடை கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர். இருப்பினும், அவர்களின் அடையாளத் தகவல்களை வெளியிட வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டதால், அந்த விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ஐ.சி.ஆர்.சி. இன் பங்களிப்பினை இந்தப் பகுதி மக்கள் வேண்டி நிற்கின்றார்கள். அகழ்வுப் பணிகளின் போது தொழில்நுட்ப உதவிகளையும், தடயவியல் ஆற்றலை வலுப்படுத்தும் உதவிகளையும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீதான நன்மதிப்பை உறுதிப்படுத்தவும் இங்கு ஐ.சி.ஆர்.சி. இன் பணி இங்கு அவசியமாகிறது.

இவ்வாறான சம்பவங்களில், மனிதாபிமான அறிக்கையிடலானது பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாi~களை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் மூலம், அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகுக்கிறது.

மனிதாபிமான சட்டங்களை மீறுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, நீதி கிடைக்க வழிவகுப்பதன் மூலம் பொறுப்புக்கூறலையும் மனிதாபிமான அறிக்கையிடல் உறுதி செய்கிறது. மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும், சர்வதேச சமூகத்தை செயல்படத் தூண்டவும் இது உதவுகிறது.

மோதல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்த நம்பகமான தகவல்களை ஆவணப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்கள் ஒரு வரலாற்றுப் பங்களிப்பினை வழங்க முடியும்.

மேலும், மனிதாபிமான அறிக்கையிடல் என்பது வெறும் தகவல் சேகரிப்பது மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்து, உலகத்தின் கவனத்தை ஈர்த்து, மாற்றத்தை ஏற்படுத்த உதவும் ஒரு முக்கியமான செயல்முறையாகும். 

மனிதாபிமான அறிக்கையிடலின் போது, ஊடக ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து அவற்றை பாதுகாப்பதும் ஊடகவியலாளர்களின் கடப்பாடாகும். புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவைகளை வெகுசன ஊடகங்களில் மாத்திரமன்றி, சமூக ஊடகங்களிலும் பகிரும் போது, குழந்தைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற பால்நிலை பாதிப்புகளில் தனித்துவமான ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும்.

மனிதாபிமான அறிக்கையிடலின் போது, துல்லியம் (accuracy) மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றோடு எழுதக்கூடிய தேர்ச்சிகளை ஊடகவியலாளர்கள் பெற்றிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் மதிப்பு மற்றும் மரியாதை (dignity & respect) ஆகியவற்றுக்கு அறிக்கையிடலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் (Do No Harm), அவர்களின் ஒப்புதலுடன் (informed consent)  தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

ஊடகவியலாளர்கள் உண்மையான மற்றும் சரியான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும். தவறான தகவல்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் மரியாதையை பாதுகாக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை மதிக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தங்கள் செய்திகள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை சரிவரப் புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

மனிதாபிமான அறிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவு பெறுவதற்கு வழி செய்ய வேண்டும். உதவிக்குழுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தொடர்பு விபரங்களை பாதிக்கப்பட்ட மக்களுடன் பகிர வேண்டும்.

மேலும் ஊடகவியலாளர்கள், மனிதாபிமான அறிக்கையிடலின் போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாகவும் அறிவினைப் பெற்றிருப்பது அவசியமாகும். 

அந்த வகையில் தற்போது இலங்கையில் பேசுபொருளாகவுள்ள மனிதப் புதைகுழி விவகாரங்களை அறிக்கையிடும்போது ஊடகவியலாளர்கள் அதனை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகி, அதற்கேயுரிய ஒழுக்க நெறிமுறைகளுடன் அறிக்கையிட வேண்டும்.