எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே?

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மிக மோசமான படுகொலைகள், பாரிய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பதிவான ஆண்டாக 1990  வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் முதல் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் இரு தரப்பும் உடன்பட்டதன் அடிப்படையில், இந்தியப் படைகள் நாட்டை விட்டுப் புறப்பட்டன. 

எனினும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமும் பின்னடைவும் மாறிமாறித் தொடர்ந்த நிலையில், மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தின் எதிரொலியாக இரு தரப்புக்கும் இடையில் முறுகல் உச்சமடைந்து, யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் முறிவடைந்தன. 

1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த நிலையில், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டன. மோதல் தீவிரமடைந்தது. இதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, இராணுவத்தினர் சில நாட்களில் அம்மாவட்டத்தினுள் நிலைகளை அமைத்துக் கொண்டனர்.

இந்த இராணுவ நடவடிக்கையின்போது, மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி, வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தஞ்சமடைந்தனர். அக்காலத்தில் தஞ்சம் பெற்ற இடங்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல்கள் நடைபெற்றன. அங்கிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பலர், இன்றுவரை காணாமல் போயுள்ளனர். இந்தச் சம்பவங்கள் நடந்து 35 வருடங்கள் கடந்தும், உறவினர்கள் இன்னும் விடை கிடைக்காத துயரத்துடன் வாழ்கின்றனர். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கூட்டாகவும் தனித்தனியாகவும் பல காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை 

1990ஆம் ஆண்டு ஆவணி மாத இறுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மேற்கொண்ட தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளின்போது, வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, கொம்மாதுறை, செங்கலடி, எறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு போன்ற கிராம மக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமுக்கு, பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி த. ஜெயசிங்கம், கலாநிதி வி. சிவலிங்கம் ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்தனர். பல்கலைக்கழகத்தின் முன்னால் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது.

இவ்வாறு அகதிகளாகத் தஞ்சமடைந்த அப்பாவி மக்களில் 158 பேரை, செப்டம்பர் 5ஆம் திகதி இலங்கை இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டாலும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மட்டக்களப்பு கொம்மாதுறையைச் சேர்ந்த சின்னான் கண்டுமணி சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியமாக இருக்கிறார்.  “எனது மகன் இரு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு பேரூந்தில் ஏற்றப்பட்டான். என் மகன் சாதாரணதரம் படிக்கும் மாணவன்,  ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டேன். எனது கதையை அவர்கள் கேட்கவில்லை. மகனுடன் சேர்த்து பல பிள்ளைகளை கையைக் கட்டி ஏற்றிச் சென்றார்கள்” என்று வேதனையுடன் கூறுகிறார். 

செப்டம்பர் 5ஆம் திகதி நிகழ்ந்தது என்ன?

சம்பவ தினத்தன்று அதிகாலை 6 மணிக்கு முன்னரே, கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்திலிருந்த அகதி முகாம், கொம்மாதுறை இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினர் மற்றும் அவ்வேளை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களாலும் சுற்றிவளைக்கப்பட்டது. 

கப்டன் முனாஸ் (றிச்சட் டயஸ்), கப்டன் பாலித, கப்டன் குணரத்ன, மேஜர் மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாகக் காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின்போது சாட்சியமளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

முகாமுக்குள் நுழைந்த இராணுவம், ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களைப் பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தது. 

மைதானத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டனர். முகமூடியினால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த முகமூடி நபர்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழு உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம், கைது செய்யப்படாதவர்களிடையே இருந்தது. 

இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டதால், அகதி முகாம் அல்லோல கல்லோகப்பட்டது. அச்சம் காரணமாக உறவினர்களால் உடனடியாக அவர்களைத் தேடிச் செல்ல முடியவில்லை. மட்டக்களப்புச் சமாதானக் குழு பாதுகாப்பு அமைச்சு உட்படப் பல தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது. 

இதற்குப் பதிலளித்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர்மார்சல் பெர்னாண்டோ, “32 பேரை மட்டுமே விசாரணைக்காகக் கைது செய்து, 24 மணி நேரத்திற்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள்” என்று தெரிவித்தார். இந்த பதிலைக் மட்டக்களப்புச் சமாதானக் குழு நிராகரித்தது. 

செப்டம்பர் 8ஆம் திகதி, கிழக்கு மாகாண இராணுவத் தளபதியாக இருந்த ஜெரி சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினர் முகாமுக்குச் சென்று ஆராய்ந்தபோது, மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவத்தினரே உறவுகளை அழைத்துச் சென்றதாகக் கூறினர். 

மீண்டும் அதே மாதம் 23ஆம் நாளன்று மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தஞ்சம் பெற்றிருந்த மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால், தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அகதிகள் முகாமை மூடிவிடுமாறும், எஞ்சியோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் கூறினர். முகாம் மூடப்பட்ட பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்து அலைந்தபோது, அரச வான்படை விமானத் தாக்குதல்களை நடத்தியது.

சத்துருக்கொண்டான் படுகொலைகள்

கிழக்குப் பல்கலைக்கழகச் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் படைமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி போன்ற கிராமங்களைச் சுற்றிவளைத்தனர். அங்கிருந்த 186 அப்பாவித் தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றார்கள்.

அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அழுகுரல்களும் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாகவும், பின்பு அப்பிரதேசத்தில் புகை மண்டலம் தெரிந்ததுடன், பின்னர் பிணவாடை வீசியதாகவும் வீடுகளின் மறைந்திருந்து உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றிருந்தாலும், தமது உடமைகளைப் பாதுகாப்பதற்காக வீடுகளில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொக்குவில் கிராமத்தைச் சேர்ந்த இராசையா இரத்தினஐயா சாட்சியமளிக்கையில், “இராணுவத்தினர் பொதுமக்களை ஒதுக்கி மெயின் வீதி ஊடாகப் பாய்ஸ் டவுன் முகாமிற்குள் கொண்டு சென்றார்கள். அன்றிரவு முகாமிற்குள் ‘என்ட அம்மா என்ட அப்போ’ என்று பலத்த அழுகுரல்கள் கேட்டது. புகையிரதப் புகை போல டயர் எரியும் புகை எழும்பியது. என்னுடைய அம்மா, அப்பா, பிள்ளைகள் உட்பட எனது குடும்பத்தில் ஒன்பது பேருடன் அருகில் இருந்தவர்களையும் பிடித்துக்கொண்டு சென்று அனைவரையும் டயர் போட்டு எரித்துள்ளனர்” என்கிறார்.

சத்துருக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த கந்தையா சிவக்கொழுந்து, “தனது குடும்பத்தில் மாமா, மைத்துனி உட்பட 10 பேரை இழந்துள்ளதாகக் கூறுகிறார். ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உட்படப் பல்வேறு விசாரணைகளில் இராணுவம் தான் இதற்குப் பொறுப்பு எனச் சாட்சியமளித்தும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை” என்கிறார்.

சம்பவத்தின்போது குறித்த முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில், அப்போது 19 வயதான கந்தசாமி கிருஸ்ணகுமார் மட்டுமே கூரிய ஆயுதத்தினாலான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.

செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் 85 பேர், 10 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் 42 பேர், வயோதிபர்கள் 25 பேர் உட்பட மொத்தம் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நீதி மறுக்கப்பட்ட 35 வருடங்கள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 நவம்பர் 30ஆம் திகதி அமைத்தார்.

இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டபோது, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. ஆணைக்குழுவின் அறிக்கையில், பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே கைது செய்து கொண்டு சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்த கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விபரம் இன்னும் இல்லை. அவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது உறுதி. அதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது ஆணைக்குழுவினால் எந்தப் பயனும் இல்லை. இன்றுவரை அது ஒரு நீதியான தீர்வையும் தரவில்லை” என்றார்.

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக, இராணுவ அதிகாரியான கேர்ணல் பேர்சி பெர்ணான்டோ, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இந்தச் சம்பவத்தை முற்றாக மறுத்துச் சாட்சியமளித்திருந்தார். 

படுகொலைகள் நடந்து 35 ஆண்டுகளின் பின்னர், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நினைவேந்தல் குழுத் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல், “உள்ளக விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது உயிரைக் காப்பாற்றத் தஞ்சம் பெற்ற இடங்களில் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமையானது, சர்வதேச மனித உரிமைகள் ரீதியில் இலங்கையின் கறைபடிந்த அத்தியாயங்களில் மட்டக்களப்புப் படுகொலைகள் உள்ளதை உறுதிப்படுத்துகிறது.

சம்பவங்கள் நிகழ்ந்தேறி 35 ஆண்டுகள் கடந்தும், உறவுகளைத் தொலைத்த குடும்பங்கள் கேட்கும் கேள்வி இன்றும் விடை கிடைக்காமலேயே தொக்கி நிற்கிறது: “எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே?”