வடமலை ராஜ்குமார்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் ஆழமான காயங்களில், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை இன்றுவரை தீர்வு காணப்படாமல் நீடிக்கிறது. 1980களிலிருந்து தொடங்கி 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டம் வரை, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அரச படைகளாலும், ஆயுதக் குழுக்களாலும், அடையாளமற்ற “வெள்ளைவான் குழுக்களாலும்” கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இது ஒரு சாதாரண அரசியல் விவகாரம் அல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையோடு நேரடியாகப் பின்னிப் பிணைந்துள்ள ஒரு மனிதாபிமானச் சிக்கலாகும். ஒரு தந்தையை இழந்த மகளின் கண்ணீரும், கணவனை இழந்த மனைவியின் தனிமைக் குமுறலும், பிள்ளையை இழந்த முதியோரின் இறுதி மூச்சும் – அனைத்தும் ஒரே கேள்வியையே எழுப்புகின்றன: “எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே?”
ஆவணப்படுத்தப்பட்ட சோகத்தின் வரலாறு
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட முதல் சம்பவங்கள் 1980களிலிருந்து தொடங்குகின்றன. அப்போது அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் காரணமாகப் பாதுகாப்புப் படைகள் சந்தேக நபர்களைக் கைதுசெய்து காணாமல் போகச் செய்த சம்பவங்கள் அதிகரித்தன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் 1996ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 1980–1996 காலப்பகுதியில் 11,513 பேர் காணாமல் ஆக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் ஈராக்கிற்கு அடுத்த இரண்டாம் இடமாகும். பின்னர், 2006–2009 போரின் இறுதிக் கட்டத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அதேபோல், 2009 மே 18 அன்று இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் புகைப்படங்களும் விபரங்களும் சர்வதேச நீதிக்கான திட்டத்தின் (ITJP) இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இவர்களில் யாரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் தீராத குரல்கள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. 14 வருடங்களுக்கும் மேலாகத் தனது மகனைத் தேடி அழும் மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த கமலா, “கடற்படை முகாமுக்கு அருகில் கடைசியாகக் கண்டதே நான் அவனைப் பற்றி அறிந்த கடைசிச் செய்தி,” என்கிறார். முதுமையிலும் நோய்களிலும் தவித்தாலும், “அவனை இறப்பதற்கு முன் ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டேனா” என்ற ஏக்கம் அந்தத் தாய்க்குள் இன்னும் உயிர் வாழ்கிறது. திருகோணமலை கணேஷ்லேன் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் நிஷாவின் தந்தை, 2009 மே மாதம் “வெள்ளை வானில்” கடத்திச் செல்லப்பட்டார். “ஒவ்வொரு இரவிலும் அப்பா கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்துவிடுவார் என காத்திருக்கிறேன்,” என்கிறாள் நிஷா. வடக்கு–கிழக்கில் இது தனிப்பட்ட கதையல்ல; இன்னும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காகக் காத்திருக்கின்றனர்.
திருகோணமலை பாலையூற்றுப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டியன் தேவியின் மகன் செபஸ்டியன் ரேகன், 2008 மார்ச் 19ஆம் திகதி வேலைக்குச் சென்றபோது இலங்கை இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது குடும்பம் குற்றஞ்சாட்டுகிறது. “அன்று என் மகனை இராணுவம் கூட்டிக் கொண்டுபோனார்கள். அதன் பின்னர் இன்று வரை எந்தச் செய்தியும் கிடையாது,” என்று சொல்லும் தேவி, மகன் காணாமல் போன அதிர்ச்சியில் தனது கணவர் நோய்வாய்ப்பட்டு ஓராண்டில் உயிரிழந்த சோகத்தையும் தாங்கியுள்ளார். தனது காணியை விற்று, மகனை மீட்டுத் தருவதாகக் கூறிய ஒருவனால் 10 இலட்சம் ரூபா கொடுத்து ஏமாற்றப்பட்ட துயரையும் இவர் பகிர்ந்துகொண்டார். கடந்த 17 ஆண்டுகளில், 39 இராணுவ முகாம்களிலும் பல ஆணைக்குழுக்களிலும் முறையிட்டும் பலனில்லை. இன்று திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவராகச் செயல்படும் இவர், 2,162 குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். “எங்களுக்கு எதுவும் தேவையில்லை. உண்மையை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்” என வலியுறுத்துகிறார்.
உளவியல் மற்றும் பொருளாதாரச் சுமை
காணாமல் போன உறவு குறித்த தெளிவற்ற இழப்பு (Ambiguous Loss) இந்தத் தாய்மார்களின் முதுமையையும் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாமல், அவர்கள் ஏக்கத்துடனும் விரக்தியுடனும் நாட்களைக் கடத்துகின்றனர். இந்தத் தொடர்ச்சியான மனக்கவலையும், ஆரோக்கியமற்ற நிலையும் இவர்களை நோயாளிகளாக்கிவிட்டது.
மறுபுறம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழப்பானது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது. குடும்பப் பொறுப்பைத் தனித்துச் சுமக்கும் பெண்கள், தமது குடும்பத்தினைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கடன்களை வாங்கிக் கொண்டே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போரின் விளைவாக உழைக்கும் உற்சாகத்தை இழந்திருந்தாலும், இவர்கள் உழைக்க அஞ்சுபவர்கள் அல்ல. ஆனால், அவர்களுக்குக் கூலியாக ஆண்களைவிடக் குறைவான தொகையே வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள் கிட்டாததும், உழைக்கும் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் இவர்களது போராட்டத்தை மேலும் கடுமையாக்கியுள்ளது.
அரசாங்கத்தின் நகர்வுகளும் போராட்டத்தின் தீவிரமும்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கம் அமைக்கும் ஆணைக்குழுக்களுக்கு முன் சாட்சியமளித்தும், வீதிகளில் 2,500 நாட்களுக்கும் மேலாகப் போராடியும் வருகின்றனர். எனினும், நிரந்தரத் தீர்வு கிட்டவில்லை. 2018ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP), பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி மட்டுமே. திருகோணமலையில் போராடிய சங்கத் தலைவி நாகேந்திரம் ஆசா கூறியதுபோல், “OMP எங்கள் பிள்ளைகளைத் தேடித் தரவில்லை. உண்மையைச் சொல்வதற்கான விருப்பமே அரசாங்கத்துக்கு இல்லை. எங்களைச் சமாதானப்படுத்துவதற்கான ஒரு கண் துடைப்புதான் இது என்கிறார்.” 2020 டிசம்பர் வரையான தகவலின் அடிப்படையில், 14,988 முறைப்பாடுகளுக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், வடக்கு மாகாணத்தில் இருந்தே 60.68 வீதமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளில் உறவுகளுக்கு நம்பிக்கை இல்லை.
அத்தோடு, போராட்டங்களில் பங்கேற்பதால் இந்த உறவுகள் தொடர்ச்சியான இராணுவப் புலனாய்வு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இன்றும் நாம் காணாமலாக்கப்பட்டோர் இணைந்து நடாத்தும் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் சென்று வந்ததற்கான தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்படுவதாகப் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின அசம்பாவிதத்திற்குப் பின்னர், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இன்னும் தம்மைப் போன்ற நலிவுற்ற குடும்பங்களைப் பாதிப்பதாக அமையப் போகிறது என்ற அச்சம் இவர்களுக்குள் ஆழமாக உள்ளது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கோரிக்கைகள்
குடும்பப் பொறுப்பைத் தனித்துச் சுமக்கும் பெண்கள், பாதுகாப்பின்மையே தமது முதன்மைக் கவலை என்கின்றனர். தமது பிள்ளைகளைத் தனித்து விட்டுவிட்டுத் தூர இடங்களுக்கு வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடச் செல்வது அச்சமாகவுள்ளதாகத் திருகோணமலை மாவட்டப் பெண் தலைமை தாங்கும் பெண்கள் சங்கத்தின் தலைவி சந்திரா போன்றவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகரித்து வரும் போதைவஸ்துப் பாவனை மற்றும் சமூகத்தின் சுடுசொற்கள் போன்றவையும் இவர்களின் அச்சத்தை அதிகரிக்கின்றன.
இவர்கள் வாழ்வாதார உதவிகள் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களுக்குச் சாதகமற்ற நுண்நிதிக் கடன்களிலிருந்து விடுபட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர். அத்துடன் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் கருத்தில்கொண்டு வாழ்வாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்; மேலும், சமுர்த்தி போன்ற திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் பயனாளிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பினை மாற்ற கிராம மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்துகின்றனர்.
சர்வதேச நீதி கிட்டுமா?
“வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் பாராதூரமான குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இனத்தை இலக்காகக் கொண்டு நடந்திருந்தால், அது இனச்சுத்திகரிப்பு குற்றமாகவும் பரிசீலிக்கப்படும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்துத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டாலும், புவிசார் அரசியல் காரணங்களால் இறுதி வரைவுகள் பெரும்பாலும் நீர்த்துப் போனதாகவே முடிவடைகின்றன. இதனால், உறவினர்களின் காத்திருப்பு தொடர்கிறது.
“என் மகன் உயிரோடு இருக்கிறானா? இறந்துவிட்டானா? எனக்குத் தெரியாது. குறைந்தது அவரது எலும்புகளாவது என் கையில் வரட்டும்” என்று ஒரு தாய் அழுது கேட்கும் போது, அதுவே மனிதாபிமானம் நிரம்பிய கேள்வியின் உச்சமாக விளங்குகிறது. இவர்கள் எதிர்பார்ப்பது பணத்தையோ அல்லது சான்றிதழையோ அல்ல. உயிருடன் கையளித்த தங்கள் உறவுகளையும், அவர்களுக்கான நீதியையும்தான். எந்த அரசாங்கமாக இருந்தாலும், அவர்களின் நியாயமான கோரிக்கைக்குப் பதிலளித்து, நீதியைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றைச் சரிசெய்து, பிழைகள் இடம்பெற்றிருந்தால் தண்டனை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்ட பின்னரே இலங்கையில் நிலையான நல்லிணக்கம் என்பது நிரந்தரமாகச் சாத்தியம் என்பதே நிதர்சனம். இந்த மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் நிகழாமையை இந்த அரசாங்கமும், எதிர்கால அரசாங்கங்களும் சட்டரீதியான வலுவுள்ள சாசனத்தின் ஊடாக உறுதி செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நிஷா போன்ற பிள்ளைகள் கதவை நோக்கி நம்பிக்கையோடு காத்திருக்கும் நிலையில், அவர்களின் கண்ணீரைத் துடைப்பது அரசின் கடமை. அதை நிறைவேற்ற முடியாவிட்டால், சர்வதேச சமூகம் முன்வந்து அவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்.

