ஜோசப் நயன்
“எப்போதும் போல கடற்றொழிலுக்குச் சென்ற என் மகன், சமையலுக்காக மீன்களுடன் வீடு திரும்பும் நேரம் வந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக என் வீட்டுச் சூழலில் இருந்த காகங்கள் இடைவிடாது கரைந்தன. வழமையாகக் காகங்கள் கரைந்தால், வீட்டுக்கு யாரோ வரப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால், என் நிலையோ அவ்வாறு அமையவில்லை. மாலை நேரம் கடந்தும் என் மகனைக் காணவில்லை.
அவனை நான் தேடாத இடமில்லை; இரவு கடந்தும் அவனைக் குறித்த தகவல் ஏதுமில்லை. கடற்படை முகாமுக்கு அருகில் கடைசியாகக் கண்டதாக ஒருவர் சொன்னதே நான் அவனைப் பற்றி அறிந்த கடைசிச் செய்தி,” என்று 14 வருடங்களுக்கு மேலாகக் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அழும் மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த கமலா கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.
தனது மகனைத் தேடியும், “அவனை இறப்பதற்கு முன் ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டேனா!” என்று ஏங்காத நாளே இல்லை எனக் கண்ணீருடன் தெரிவிக்கும் அந்தத் தாய், தனது முதுமையுடனும் பல்வேறு நோய்களுடனும் இன்றும் தன் மகனுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். ஒருபுறம் மகனைக் காணவில்லை; அவன் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை. மறுபுறம், முதுமையில் தன்னைப் பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் தன் மகன் இல்லையே என்ற வேதனையுடன் நாட்களைக் கடந்து செல்கின்றாள் அந்தத் தாய்.
வேறுபட்ட கதைகள்
சீறாப்புராணம் பாடுவதற்குச் சென்ற என் கணவர், நடு வீதியில் ஆயுதக் குழு ஒன்றினால் 1986ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இதுவரை அவர் என்னிடம் வரவே இல்லை.
“என்னுடைய 27வது வயதில், என்னையும் 5 மற்றும் 6 வயதே ஆன என் இரண்டு பிள்ளைகளையும் விட்டு, விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட என் கணவர் இன்னமும் என்னையும் என் பிள்ளைகளையும் தேடி வரவே இல்லை. இத்தனை வருடங்களில் நான் அவரைத் தேடாத நாளே இல்லை. அவர் இல்லாமல் என்ன ஆனார் என்று கூடத் தெரியாமல் நானும் எனது குழந்தைகளும் பட்ட துயரங்கள் யாருக்கும் வரக்கூடாது,” எனச் சிலாவத்துறையைச் சேர்ந்த 66 வயதான பைலா தெரிவிக்கின்றார்.
இவை இலட்சக்கணக்கானோரின் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு சம்பவங்கள் மட்டுமே. இவ்வாறான ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கங்கள் கதைகளாக மாத்திரமே இன்றுவரை எம்மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.
இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தம், பல்வேறு வகைகளிலும் மீள முடியாத துயரங்களையும், ஆழமான வடுக்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக, இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயத்தில் அந்த வலி, தீர்க்க முடியாத ஒரு துயரமாகவே கருத வேண்டியுள்ளது.
நீதிக்கான கேள்விகள்
இராணுவத்தின் கையில் ஒப்படைத்த என்னுடைய பிள்ளை எங்கே? சரணடையச் சொல்லி இராணுவம் கேட்க, நான் என் பிள்ளையைச் சரணடையச் சொன்னேன். அவன் இப்போது எங்கே? விசாரித்து விட்டு விடுவோம் என அழைத்துச் சென்ற என் கணவன் எங்கே? பாடசாலைக்கு இராணுவ முகாம் உள்ள பகுதியால் சென்ற என் மூத்த மகள் எங்கே? ஆயுதக் குழுக்களால் கொண்டு செல்லப்பட்ட என் மகன் எப்போது வருவான்? என்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், அவற்றைத் தெரிந்து கொள்ளவே முடியாத நிலையில், சற்றும் மனம் தளராது இந்த உறவுகள் போராடி வருகின்றனர். அரசாங்கம் ஆண்டுக்கொரு முறை அமைக்கும் ஆணைக்குழுக்களுக்கு முன் சாட்சியம் அளித்தும், ஆங்காங்கே நீதிக்காக நடக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டும் தங்களின் தேடலின் வீரியத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் இந்த உறவுகள்.
புள்ளிவிபரங்களும் நிலையற்ற தீர்வுகளும்
2020 டிசம்பர் வரையான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் 14,700 முறைப்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதேநேரம், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக நேரடியாக 2,932 முறைப்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இவற்றுள், தற்போது 14,988 முறைப்பாடுகளுக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த மொத்த முறைப்பாடுகளிலும் 60.68 வீதமானவை வடக்கு மாகாணத்தில் இருந்தே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் தென் இலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று அறியாமலேயே, நீதி கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான தாய்மார்களும் உறவுகளும் மரணமடைந்துள்ளனர்.
இந்தத் துயரமான பின்னணியில், ஆண்டுக்கு ஆண்டு மாற்றமடையும் அரசாங்கங்கள், ‘உள்ளக விசாரணையா? சர்வதேச ரீதியான விசாரணையா?’ என்பதிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றன.
பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிலையான தீர்வையும், அத்துயரங்களிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான செயல்திட்டத்தையும் அரசாங்கம் விரைவில் முன்னிறுத்திச் செயல்படுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.
அதுமட்டுமின்றி, காணாமல் ஆக்கப்படுதல் என்பது சர்வதேச ரீதியாக எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனித உரிமை மீறலாகும். எனவே, இவ்வாறான மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் நிகழாமையை இந்த அரசாங்கமும், எதிர்கால அரசாங்கங்களும் சட்டரீதியான வலுவுள்ள சாசனத்தின் ஊடாக உறுதி செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பிள்ளைகளை, கணவரை, சகோதரர்களை, தாயை, தந்தையை, மனைவியைத் தேடும் இந்த உறவுகள் எதிர்பார்ப்பது பணத்தையோ அல்லது காணாமல் போனமைக்கான உறுதிப்படுத்தல் சான்றிதழையோ அல்ல. மாறாக, உயிருடன் கையளித்த தங்கள் உறவுகளையும், அவர்களுக்கான நீதியையும்தான்.
எனவே, எந்த அரசாங்கமாக இருந்தாலும், அவர்களின் நியாயமான கோரிக்கைக்குப் பதிலை வழங்க முன்வர வேண்டும், அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றைச் சரி செய்ய முன்வர வேண்டும். பிழைகள் இடம்பெற்றிருந்தால் தண்டனை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இதுவே, இருப்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் வழங்கக்கூடிய ஆகச் சிறந்த அற்பணிப்பு.
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்ட பின்னரே இலங்கையில் நிலையான நல்லிணக்கம் என்பது நிரந்தரமாகச் சாத்தியம் என்பதே நிதர்சனம்.

